Pages

Tuesday, August 27, 2013

மின்சாரத்தை சேமிக்கும் வழிகள்

ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் வைத்து நமது வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கென்ன பலன் என்று நினைக்கலாம். நிச்சயமாக உள்ளது. உங்கள் வீட்டு மின் கட்டணம் குறைவாக வரும், மேலும், உங்கள் வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
இதற்கு வீட்டில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
வீட்டில் தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின் விளக்குகளை, மின் விசிறிகளை அவ்வப்போது அணைத்து விட வேண்டும்.
வெளிச்சமான அறைகள் உள்ள வீடுகளை கட்ட வேண்டும். வாடகைக்கு குடிபோகும் போது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும்படியான வீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகள் போடுவதை தவிர்க்கலாம்.
சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் போது அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.
மஞ்சள் நிற பல்புகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து, டியூப் லைட் மற்றும் தற்போது வந்துள்ள சிறு குழல் விளக்குகளை பயன்படுத்துவதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
டியூப் லைட்டுகளில் பழைய சோக்குகளை மாற்றி விட்டு தற்போது வந்துள்ள எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட் எரிவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் தாமதம் மற்றும் அதனால் வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
குறைந்த எடையுள்ள மின் விசிறிகளாகப் பார்த்து வாங்கவும்.
மின் விசிறிகளையும், டியூப் லைட்டுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம். வெயில் அடிக்கும் நாட்களில் வெளியில் துணிகளைக் காயப்போடுவதே சிறந்தது.
வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் போது தண்ணீரை சூடு படுத்தி உடனே பயன்படுத்துங்கள். தேவையான அளவுக்கு சூடு ஆனதும் உடனே ஆப் செய்து விடுங்கள்.
இன்டெக்சன் ஸ்டவ்களை பயன்படுத்தும் போது அடிப்பாகம் அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இதனால் மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் அமர்ந்து டிவி பார்ப்பதை விட, கூடுமானவரை அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து டிவி பார்ப்பது சிறந்தது. இது பல வீடுகளில் ஒத்துவராது என்றாலும், முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
இடம் இருந்தால் காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் அமர்ந்து சில மணி நேரங்கள் பொழுது போக்குவது, உடலுக்கும், மின்சாரத்துக்கும் சிறந்த வழியாகும்.
தூங்க செல்லும் முன்பும், வீட்டை விட்டு கிளம்பும் முன்பும், அனைத்து மின் சாதனங்களும் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பிரிட்ஜ்களில் அதிகமான பொருட்களை வைத்து பராமரியுங்கள்.  பிரிட்ஜ்களில்  அதிகமான பொருட்கள் இருப்பது, அது குளிர் தன்மையை நீண்ட நேரம் பாதுகாத்து வைத்து மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்த உதவுகிறது.


Friday, August 23, 2013

உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள்

பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட்  போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.
எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.
இதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது?)  அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.
இப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.
இதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.
ஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.